தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்துவருகிறார். இந்தச் சிறுமியிடம் அவரது தயார் ஜனவரி 1ஆம் தேதி மாலை நேரம் அருகில் வசிக்கும் உறவினரின் வீட்டிற்குச் சென்று பூக்கொடுத்துவிட்டு வருமாறு கூறியுள்ளார்.
அவ்வாறே சிறுமியும் உறவினரின் வீட்டிற்குச் சென்று பூக்கொடுத்துவிட்டு வீடு திரும்புகையில், ஒஜிஅள்ளி நியாயவிலைக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றும் கணேசன் (55) என்பவர் தனியாகச் சென்றுகொண்டியிருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கணேசனிடம் விசாரணை மேற்கொண்டு அவரை கைதுசெய்து தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவேஸ் குமார் பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியா் கார்த்திகா, கணேசனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் கணேசனை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.