தருமபுரி: லளிகம் அடுத்த தம்மனம்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(31). இவர் தருமபுரி பிஎஸ்என்எல் (BSNL) அலுவலகம் அருகே உள்ள தனியார் கட்டிடத்தில் யூடியூப் (YouTube) சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) காலை திடீரென 12 பேர் கொண்ட கும்பல், ஆனந்தகுமாரின் அலுவலகத்துக்குள் புகுந்து எதற்காக எங்களது யூடியூப் சேனலில் போலியாக பார்வையாளர்களை அதிகப்படுத்தியுள்ளாய்? இதை நீ மட்டும் செய்தாயா? அல்லது வேறு யாருடனும் சேர்ந்து செய்தாயா என கேட்டு ஆனந்தகுமாரை அந்த கும்பல் தாக்கியுள்ளனர்.
மேலும் பட்டா கத்தியை காட்டி மிரட்டி ஆனந்தகுமார் மற்றும் அலுவலகத்தில் இருந்தவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அலுவலகத்தில் இருந்த, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் துாக்கி சென்று, ஆனந்தகுமாரை கத்தி முனையில் காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த, ஆனந்தகுமார் அலுவலகத்தில் பணியாற்றி வரும் தருமபுரியை சேர்ந்த பிரோம்குமார்(18) என்பவர், தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைனையடுத்து தருமபுரி எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி டிஎஸ்பி செந்திகுமார் தலைமையிலான காவல் துறையினர் ஆனந்தகுமாரை கடத்தி சென்றவர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில், தருமபுரி அடுத்த குண்டல்பட்டியில் ஆனந்தகுமாரை காரில் கடத்தி சென்ற 12 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து 12 பேர் கொண்ட கும்பலிடம் கடத்தலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், ஆனந்தகுமாரை கடத்திய சின்னசாமி என்பவரும் ஒரு யூடியூப் சேனல் நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், ஆனந்தகுமார் தங்களது யூடியூப் சேனலில் அதிக பார்வையாளர்கள் உள்ளது போல், பொய்யான தகவலை பதிவிட்டு உள்ளதாகவும், இதனால் தங்களது சேனலை யூடியூப் நிறுவனம் தடை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அதனால் தங்களுக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டதால், இதற்கு ஆனந்தகுமார் தான் காரணம் என நினைத்து, நண்பர்களை வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த பழைய தருமபுரியை சேர்ந்த சின்னசாமி (38), இவருடைய கூட்டாளிகளான அதகபாடியை சேர்ந்த சீராளன்(30), கோடியூரை சேர்ந்த சுந்தரம்(30), சுரேஷ்(39), எ.ஜெட்டிஹள்ளியை சேர்ந்த முருகன்(26), ராமு(30), மல்லிக்குட்டையை சேர்ந்த சதீஷ்(35), பெரியசாமி(27), கிருஷ்ணாபுரம் சந்திரன்(29), தருமபுரி தினேஷ்குமார்(23), சோளப்பட்டி மணி(25) உள்ளிட்டோரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி சுவிப்ட் கார், 6 பைக்குகள் மற்றும் ஆனந்தகுமார் அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட, 70 மொபைல் போன்கள், 5 லேப்டாப்புக்களையும் பறிமுதல் செய்தனர். தருமபுரியில் யூடியூப் சேனல் நடத்தி, ஏற்பட்ட தொழில் போட்டியில், பட்டப்பகலில் கத்தி முனையில் ஒருவரை 12 பேர் கொண்ட கும்பல் கடத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இருந்து 2 குழந்தைகள் மாயம் - நடந்தது என்ன?