தருமபுரி: கடத்தூரில் பாமக சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று (செப்.10) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு கலந்துரையாடினார்.
மேலும், இந்த கூட்டத்திற்கு முன்னதாக அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காவிரியில் ஆண்டுதோறும் 100 டி.எம்.சி தண்ணீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது. இதனை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்ப, காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதை பற்றி அரசு பேசாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால், 5 இலட்சம் இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்கின்றனர். சிப்காட்டில் அதிக நிறுவனங்கள் வரவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் நீர்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் குளிர்பதன கிடங்கு இல்லை. தக்காளி விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, தற்போது விலை குறைந்து வருகிறது.
தக்காளி குளிர்பதன கிடங்கு இருந்தால், தக்காளி விலை உயர்ந்திருக்காது. காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடகா மறுக்கிறது. காவிரி ஆணையம், நீதிமன்றம் இருக்கு; ஆனாலும் நமக்கு தண்ணீர் வரவில்லை. இன்றைய தேதியில் நமக்கு 60 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும். இருப்பினும் நாம் 30 டி.எம்.சி தான் கேட்கிறோம். டெல்டா மாவட்டங்களில் குறுவை தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது.
கர்நாடக அரசின் பிடிவாதம் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதனால் அணைகளின் நிர்வாகத்தை காவிரி ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். அப்பொழுது தான் நமக்கு சரியான தண்ணீர் கிடைக்கும். கர்நாடக முதலமைச்சரை, தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சந்தித்துப் பேச வேண்டும். நமக்கு குடிநீருக்கான தண்ணீர் தேவை இருக்கிறது.
தமிழ்நாடு நெல்லுக்கு கூடுதல் விலை தர வேண்டும். கடந்த ஆண்டு ரூ.100 கொடுத்துள்ள நிலையில், இந்த ஆண்டு வெறும் 7 ரூபாய் தான் கொடுத்துள்ளார்கள். இதை தமிழ்நாடு அரசு செய்வது போல் தெரியவில்லை. மேட்டூர் அணை மிகப்பெரிய அணை. இதனை ஆழப்படுத்த வேண்டும். இவ்வாறு ஆழப்படுத்தினால், கூடுதலாக 20 டி.எம்.சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
வருங்காலங்களில் தண்ணீர் பிரச்சினை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கு அரசு எங்கேயாவது கடன் வாங்கி முதலீடு செய்ய வேண்டும். தொப்பூர் சாலையில் அதிக அளவில் விபத்து ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை அமைச்சர், மத்திய அமைச்சரை சந்திக்க வேண்டும்.
ஜி20 மாநாட்டை இந்தியா சிறப்பாக நடத்தி உள்ளது. இது நமக்கு பெருமை. இதற்கு பிரதமர் மோடி மற்றும் அதிகாரிகளுக்கு பாமக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் குழு அமைக்கப்பட்டது. அதை ஆய்வுகளுக்கு பிறகு பேசலாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டரை ஆண்டுகள் கழித்து, இந்தியா முழுவதும் சட்டமன்ற தேர்தல் வரவேண்டும். சனாதனம் என்பது முக்கிய பிரச்சினை இல்லை. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு. அதைப்பற்றி பேசலாம். நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கு பேசுவதற்கு, அதைப்பற்றி பேசலாம். சனாதானம் முக்கியமல்ல” என்றார்.
இதையும் படிங்க: டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி!