தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், ”தருமபுரி மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். அமமுக-வில் உள்ள நிர்வாகிகளை பதவி ஆசைகாட்டி அமைச்சர் கே.பி. அன்பழகன் அதிமுகவில் இணைத்து வருகிறார். இனி யாரும் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையமாட்டார்கள் என்றார்.
தொடர்ந்து அவரிடம் ராஜன் செல்லப்பா அதிமுகவிற்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஒற்றை தலைமையை வலியுறுத்தி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிற்கு பொதுச்செயலாளராக சசிகலா பதவி வகிக்கும்போது, அவரேதான் முதலமைச்சராகவும் பதிவிவகிக்க வேண்டும் என ஓபிஎஸ், அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டோர் குரல் கொடுத்தார்கள்.
அதன்பிறகுதான் ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம் தியானம் செய்தார். அதற்குப் பிறகுதான் பிளவு ஏற்பட்டது. தொடர்ந்து, கூவத்தூருக்கு சென்று 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணையோடு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். ஒற்றைத் தலைமை கருத்தை வலியுறுத்துவது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்தான். ஈபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் சந்தர்ப்பத்திற்காக ஒன்று சேர்ந்தார்கள். பூனைக்குட்டி தற்போது வெளிவந்துவிட்டது.
ராஜன் செல்லப்பாவை விட்டு ஓபிஎஸ் பேச சொல்கிறார். அதிமுகவில் அனைவரும் மக்களவைத் தேர்தலில் தோற்றபோது ஓபிஎஸ் மகன் மட்டும் எப்படி வெற்றிபெற்றார். ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவிற்கு உள்ள மூன்று சீட்டுகளில் ஒரு சீட்டை அன்புமணி ராமதாஸுக்கு வழங்கிவிட்டால் மீதமுள்ள இரண்டு சீட்டுகளை பாரதிய ஜனதா கட்சிகூட கேட்கலாம். அவர்கள் நடத்தும் தலைமைக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டது” என்றார்.