தர்மபுரி: கடத்தூர் அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ராஜப்பன், குப்பு தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். இதில் இரண்டு ஆண், ஒரு பெண் ஆகிய மூன்று பிள்ளைகள் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள். இந்த நிலையில் இவர்களுக்கு முன்னோர்கள் வழி சொத்து, ஒரு ஏக்கர் மேட்டு நிலம் இருந்து வருகிறது. இந்த நிலத்தில் விவசாயம் செய்து, தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இதில் மூன்று பிள்ளைகளும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளாக இருப்பதால், இவர்களது நிலத்தை அருகில் உள்ள உறவினர்களான சின்ராஜ், பவுனுக்காசி, பவித்ரா ஆகியோர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஆதரவின்றி உள்ள இந்த குடும்பத்தினரை அடித்து துன்புறுத்தி, மிரட்டியும் வருகின்றனர்.
அதுமட்டுமின்றி வயதான தாய் மற்றும் 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளை வைத்துள்ள இந்த குடும்பத்தினருக்கு ஆதரவு யாரும் இல்லாததால் அருகில் உள்ளவர்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால் காவல் துறை, வருவாய்த் துறை எனப் பல்வேறு இடங்களில் புகார் மனு அளித்தும் இதுவரை அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
தங்கள் விவசாய நிலப் பகுதிகளுக்குச்சென்றால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டி தாக்குகிறார்கள் என்றும்; அதனால் அந்த நிலத்தின் பக்கம் எங்களால் செல்ல முடியவில்லை எனவும் கூறி, குப்பு தனது இரண்டு மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் புகார் அளிக்க வந்தார்.
அப்போது மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து உடலின் மீது மண்ணெண்ணெயினை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனைத்தொடர்ந்து அருகில் இருந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் மண்ணெண்ணெய் கேனை பறித்து, பாதுகாப்பாக மீட்டனர்.
மேலும் 'தங்களது விவசாய நிலத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு கொடுக்காமல், ஏமாற்றி அபகரித்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். இதனால் தங்களது உயிருக்குப் பாதுகாப்பில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் குடும்பத்துடன் இங்கே தற்கொலை செய்து கொள்வோம்.
எங்கள் நிலத்தை அரசே எடுத்துக்கொள்ளட்டும்’ என கண்ணீர் மல்க மாற்றுத் திறனாளி பிள்ளைகளுடன், தாய் குப்பு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் நான்கு பேரையும், காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மன வளர்ச்சி குன்றிய பிள்ளைகளுடன், தாய் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதமாற்றம் செய்யப்படவில்லை - மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கத்தயாராகும் அலுவலர்கள்