கர்நாடகாவில் பெய்த கனமழையின் காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் அதிகரித்ததால், கர்நாடகா அரசு காவிரி ஆற்றில் அதிகளவு நீரை திறந்துவிட்டது. அதன்படி, நேற்றைய நிலவரப்படி சுமார் 2.80 லட்சம் கனஅடி காவிரி நீர் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால், 15 வீடுகளுக்குள் நீர் புகுந்ததால் அவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். மேலும், தாழ்வான இடங்களில் வசித்துவரும் மக்களும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாகக் கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு தொங்குபாலம் ஒன்று நீரில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
இந்நிலையில், இன்று கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால், ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீரின் அளவு குறைந்துவருகிறது. தற்போது, இரண்டு லட்சம் கனஅடி நீர் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வருகிறது. நீர்வரத்தின் அளவு மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.