தருமபுரி: தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில், சந்தன மரங்களைப் பதுக்கி வைத்துள்ளதாக விசாரிக்கச் சென்ற அதிகாரிகள் வரம்பு மீறி, அத்துமீறலில் ஈடுபட்டனர். விசாரணைக்கு முன்னரே குற்றத்தை நிரூபித்த அவர்கள், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு விதமான துன்புறுத்தல் அளித்தனர்.
1992ஆம் ஆண்டு நடைபெற்ற அச்சம்பவம், 1995ஆம் ஆண்டில் வெளிக் கொண்டு வரப்பட்டது. அதில் காவல்துறை, வனத்துறை, வருவாய்த்துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய 269 அதிகாரிகள், அப்பகுதியில் வசித்த 18 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அதனை அடுத்து, 1996ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2006ஆம் ஆண்டு தருமபுரி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர், 2011ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: விரைவில் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு அமர்வு.. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு!
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த மேல்முறையீடு வழக்கு, கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 லட்சம் ரூபாயும், அரசு வேலை அல்லது சுய தொழில் செய்ய உதவ வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி வாச்சாத்தி வழக்கில் முதன்மை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்பட 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மேல்முறையீடு செய்த மனுவைத் தள்ளுபடி செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆறு வாரங்களில் தருமபுரி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் மூன்றாண்டு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி (ஏ 4) முதன்மை வனக்காப்பாளர் பாலாஜி (66), நேற்று (நவ.23) தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி பொறுப்பு மோனிகா, அரசு வழக்கறிஞர் ரமேஷ்பாபு முன்னிலையில் சரணடைந்தார். பின்னர் சரணடைந்த முதன்மை வனக்காப்பாளர் பாலாஜி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!