தருமபுரி: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்று (ஜன.09) நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. ஒரே நாளில் 3 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் வாரச்சந்தை கூடுவது வழக்கம். புகழ் பெற்ற இந்த வாரச் சந்தையில் முக்கிய வர்த்தகமாக திகழ்வது, ஆடு விற்பனை.
இதற்காக தருமபுரி மாவட்டம் தொப்பூர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், சேலம் மாவட்டம் மேச்சேரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஆடுகளை விற்பனைக்காக இந்த சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம்.
தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், விவசாயிகள் பொங்கல் செலவிற்காக முன்கூட்டியே ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர். மேலும், பொங்கலுக்குப் பிறகு தீவன தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ஆடுகளை விற்று வருகின்றனர்.
இந்நிலையில், இன்று கூடிய சந்தையில் சுமார் 3,000 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சென்ற வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் விலை 500 முதல் 1,500 ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. குறைந்தபட்சமாக ஒரு ஆட்டுக்குட்டி 2,500 ரூபாய் முதல் ஒரு ஆடு 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரும் போகி திருநாளன்று, மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாட்டில் ஆடுகளை பலியிட்டு வழிபடுவர். மேலும் பொங்கலைத் தொடர்ந்து வரும் கரிநாள் அன்றும் ஆடுகளை பலியிடுவதற்காகவும் ஏராளமான பொதுமக்கள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். இந்நிலையில், இன்று ஒரே நாளில் சந்தையில் 3 கோடி ரூபாய் அளவில் ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.