நாடு முழுவதும் இன்று (செப்.13) நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று (செப்.12) ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகிக் கொண்டிப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தருமபுரியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று அரசு மருத்துவக் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தருமபுரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பசேகரன் உள்ளிட்டோரும் திமுக தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரிடம் காவல் துறை பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் செவத்தாகவுண்டர் தெருவைச் சேர்ந்த டிராக்டர் வியாபாரி மணிவண்ணன் - ஜெயசித்ரா தம்பதியின் மகன் ஆதித்யா இன்று இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கனவுகளுடன் சிறகடித்த மாணவச் செல்வங்களை கொன்று புதைக்கும் நீட் தேர்வு... மனம் இறங்குமா மத்திய, மாநில அரசுகள்?