தருமபுரி: கேட்வே பொலிட்டிக்கல் ஸ்டேட்டஸ் என்ற தனியார் அமைப்பு ஆண்டுதோறும் லோக்சபா இணையதள தரவுகளின் அடிப்படையில் சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, 17ஆவது மக்களவையில் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் தலை சிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளன.
இப்பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி செந்தில் குமார் நான்காவது இடத்திலும், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்.எம்.குமார் பத்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் முதல் பத்து இடத்திற்குள் இடம்பெற்றுள்ளனர்.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி என் வி செந்தில்குமார் நாடாளுமன்ற வருகையில் 100% வருகையும் தேசிய அளவில் 79 சதவீதமும், மாநில அளவில் 74% பெற்றுள்ளார். 266 விவாதங்களில் பங்கு பெற்று உரையாற்றியுள்ளார். மாநில அளவில் 46.9% தேசிய அளவில் 41.2 சதவீதம் பெற்றுள்ளார்.
தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி அரூர் வழியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தை இரண்டு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த சமீபத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தி அனுமதி பெற்று தந்துள்ளார், தருமபுரி எம்.பி. செந்தில் குமார். இதற்காக, மத்திய அரசு 170 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இரண்டு ஆண்டுகளாக தொப்பூர் மேட்டூர் சாலை குண்டும் குழியுமாக இருந்தது. அதனை 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம், மேட்டூர் - பாலமலை கிராம மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தது, செல்போன் டவர் கிடைக்காத அரூர் மலை கிராம மக்களுக்கு செல்போன் டவர் அமைத்துக் கொடுத்தது,
வத்தல்மலை சித்தேரி உள்ளிட்ட மலைக் கிராமங்களில் உள்ள மக்களின் மேம்பாட்டுக்காக சாலை வசதி உள்ளிட்ட மக்கள் நலப் பணிகளை செய்ததால் தருமபுரி எம்.பி. செந்தில்குமாருக்கு தொகுதி மக்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் தங்கள் வாழ்த்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் தன் பணிகளை சிறப்பாக செய்தாலும் அடிக்கடி சமூக வலைதளத்தில் சர்ச்சை கேள்விகளை எழுப்புவதும், எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி கொடுப்பதும் இவரது வாடிக்கையாக உள்ளது. தொகுதியில் உள்ள எதிர்க்கட்சியினர் இவரை ட்விட்டர் எம்.பி. என்று அழைத்தாலும் படிப்புக்காக பண உதவி, மருத்துவ உதவி கோரி பதிவிடுபவர்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து உதவி செய்துவருகிறார், தருமபுரி எம்.பி. செந்தில் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தருமபுரியில் பயங்கரம்; சொத்து தகராறில் மகனை ஓட ஓட வெட்டிய தந்தை - பதறவைக்கும் சிசிடிவி காட்சி