மரங்கள், ஓட்டு வீடுகளின் கூரை சந்துகளில் கூடு கட்டி, பல்கி, பெருகி வந்த சிட்டுக்குருவிகள், தற்போது வாழ்விடம் இல்லாமல் மெல்ல, மெல்ல மறைந்து வருகின்றன. நவீன தொழில்நுட்பங்களின் அபரிமித வளர்ச்சிக்கு முதலில் பலியாகிவரும் சிட்டுக்குருவிகளை காக்கும் முயற்சியில் தருமபுரியைச் சேர்ந்த துரை, செந்தில், மாரியப்பன் ஆகிய மூவரும் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஸ்ரீநிவாசன் கூறும்போது, “எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் சிட்டுக்குருவி என்ற இந்த பறவையும் வாழும். பறவையியல் ஆய்வாளர்கள் தரும் தகவலின்படி 10,000 ஆண்டுகளாக பல்கிப் பெருகி வாழ்ந்து வரும் இந்த பறவை இனம் தற்போது வாழ்விடம் இல்லாமல் மெல்ல, மெல்ல அழிந்து வருகின்றன.
மாறிவரும் கட்டட வடிவமைப்புகள் - குறைந்து வரும் தானிய உற்பத்தி - குறுகி வரும் விவசாய நிலபரப்புகள் என எல்லாமும் இணைந்தே சிட்டுக்குருவிகளை அழித்துவருகின்றன. உணவும் உறைவிடமும் வாழும் மனிதர்களுக்கு மட்டுமல்ல குருவிகளுக்கும் அடிப்படையான தேவை தான். உணவு சேகரிப்பதைக்கூட சிட்டுக்குருவிகள் சமாளித்துவிடக் கூடும். ஆனால், முட்டையிடுவதற்கான தகவமைப்பு உள்ள வாழ்விடமின்றி திரியும் அவற்றின் இனப்பெருக்கம் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அழிவின் விளிம்பில் நிற்கும் சிட்டுக்குருவிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சிட்டுக்குருவிகளை வளர்க்க மக்களிடம் ஆர்வத்தை இயற்கை ஆர்வலர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய மாற்றத்தை, தருமபுரியை அடுத்துள்ள நந்தி நகரில் உள்ள தனது வீட்டில் சிட்டுக்குருவிகளுக்காக மண்பானை குடுவைகள் வைத்து கூடுகள் அமைத்து நாள்தோறும் அவற்றுக்கு தேவையான தண்ணீா், தானியங்களை குடுவைகளில் நிரப்பிவைக்கும் பணியின் மூலமாக தொடங்கி இருக்கிறார், ஆசிரியர் துரை.
இது பற்றி அவர் கூறுகையில், “கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் எங்கள் பகுதியில் ஏராளமான சிட்டுக்குருவிகள் இருந்தன ஆனால் தற்போது அவை பெருமளவு குறைந்து விட்டன. காரணம் ஓட்டு வீடுகள் எல்லாம் கான்கிரிட் கட்டங்களாக உருமாறியது தான். எனவே, சிட்டுக்குருவிகள் தங்குவதற்கு மண்பானை குடுவைகள் அமைத்து தானியம், தண்ணீா் நிரப்பி என்னாலான சிறு பணியை நான்கு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறேன்” என்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக தனது நெல்அரவை ஆலையில் சிட்டுக் குருவிகளுக்கு உணவளித்து வருகிற சவுளுப்பட்டிப் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கூறுகையில், ”தனது நெல் அரவை ஆலையில் 500க்கும் மேற்பட்ட குருவிகள் வந்து பசியாறிவிட்டுச் செல்கின்றன. ஆகவே தங்கள் வீடுகளுக்கு அருகில் வரும் அவற்றை துரத்தாமல் அனுமதியுங்கள்” என எல்லோரிடமும் வேண்டுகோள் விடுக்கிறார்.
தன் வீட்டின் மாடியில் மரம், செடி, கொடிகளை வளர்த்து சிறிய பூங்கா அமைத்திருக்கும் உடற்கல்வி ஆசிரியர் செந்தில் , ”என் வீட்டில் காலை, மாலை நேரங்களில் நூற்றுக்கணக்கான சிட்டுக்குருவிகளின் கீச்சு குரல்களை கேட்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் அதிகமாக கூடுகின்றனர். மேலும், அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை என் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் போட்டுக்காட்டி சிட்டுக்குருவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இது அவர்கள் மனதில் சிட்டுக்குருவிகளை வளர்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது” என்றார்.
இதையும் படிங்க : 'கரோனாவால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய அரசு முன்வர வேண்டும்'