தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் சித்ரா தம்பதியின் மூத்த மகன் பூபதி. இவர் 2015ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அவருடன் பிறந்தவர்கள் ஒரு தம்பி, ஒரு தங்கை. பூபதிக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தங்கை திருமணத்தை நடத்தி முடித்துவிட்டு ராணுவப் பணிக்குச் சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் 4ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த ராணுவ வாகன விபத்தில் பூபதி உயிரிழந்தார். உயிரிழந்த பூபதியின் உடல் சொந்த ஊரான பாலக்கோடு கம்மாளப்பட்டி பகுதிக்கு ராணுவ வாகனத்தின் மூலம் கொண்டுவரப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இறுதி அஞ்சலியில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினருமான கே.பி. அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் பூபதியின் மரணம் பாலக்கோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காவலருக்கு மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்!