தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். விளைவிக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு சந்தையில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்து கிலோ 10 ரூபாய்க்கும், 25 கிலோ எடை கொண்ட பெட்டி 250 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து விளைச்சல் அதிகரித்து தக்காளியின் வரத்து அதிகரித்ததால், மேலும் விலை கடுமையாக சரிந்து கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த இரண்டு மாதங்களாக விலை ஏற்றமில்லாமல் தொடர்ந்து தக்காளியின் விலை சரிந்து வருவதால், அறுவடை செய்யும் கூலிக்கு கூட வருவாய் கிடைக்கவில்லை எனக்கூறி விவசாயிகள் வனப்பகுதியில் சாலையோரம் கொட்டிவிட்டு செல்கின்றனர். வனப்பகுதியில் உள்ள குரங்குகளும், மேய்ச்சலுக்கு வரும் ஆடுகளுக்கும் அவை உணவாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தக்காளி விலை ஏற்றம் காணாததால், விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தொடக்கம்