தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலின்போது வாக்களிக்க வரும் வாக்காளர்கள் முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கரோனா தடுப்பு உபகரணங்களைத் தேர்தல் அலுவலர் கார்த்திகா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தேர்தல் அலுவலர், "இந்தியத் தேர்தல் ஆணையம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களது பாதுகாப்பினை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு வழங்குவதற்காக வரப்பெற்றுள்ள கரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கரோனா தொற்று காரணத்தினால் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 1,817 வாக்குச்சாவடிகளாக உள்ளன.
வாக்குச்சாவடிகள், துணை வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏதுவாகத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுவருகின்றன. கரோனா தொற்று காரணத்தினால் நடைபெற உள்ள சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்குத் தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, 1,908 தெர்மா ஸ்கேனர், 12,537 (500மிலி) - 19,887 (100மிலி) கிருமி நாசினிகள், 19,987 முக்கவசங்கள், 1,19,922 மூன்றடுக்கு முகக்கவசங்கள், 54,510 ஓரடுக்கு முகக்கவசங்கள், 59,961 கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்கள் தனித்தனியே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வாக்குச்சாவடி வாரியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பாதுகாப்பு உபகரணங்களைத் தனித்தனியாகப் பிரித்து வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைத்திட ஏதுவாகப் பணிகள் நடக்கின்றன. எனவே, பொதுமக்கள், அலுவலர்கள், பணியாளர்கள், முகவர்கள் என அனைவரும் சட்டப்பேரவைத் தேர்தலைப் பாதுகாப்பான முறையில் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று கூறினார்.