தருமபுரி: பழைய தருமபுரி சின்னத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேலு மகன் சத்ரியன் (25). இவர் 17 வயதுடைய பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த மே மாதம் வீட்டை விட்டுச் சென்று திருமணம் செய்துகொண்டனர். இது குறித்து பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் தருமபுரி அனைத்து மகளிர் காவல் துறையினர் சத்ரியனை போஸ்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனைத் தொடர்ந்து ஜாமினில் வெளிவந்த சத்ரியன், தான் காதலித்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்ததால், தருமபுரி பேருந்து நிலையத்தில் கல்லூரிக்குச் சென்ற போது அப்பெண்ணைச் சேர்ந்து வாழ அழைத்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பெண்ணின் தாயார் சத்ரியனை மிரட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.
பின்னர், காவல் துறையினர் இது குறித்து சத்திரியனிடம் விசாரனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தான் சத்ரியன் இரண்டு நாள்களாக காணாமல் போன நிலையில் இன்று (டிச.24) காலை தருமபுரி அடுத்த ஆலங்கரை செல்லும் வழியில் உள்ள மின் வாரிய அலுவலகம் அருகில் மரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால், அங்கு கூடிய உறவினர்கள் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சத்திரியனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சத்திரியனின் 4 பக்க கடிதம் சிக்கியது. அதில், தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண்ணை பிரித்துவிட்டனர். தன் காதல் மனைவியை நினைத்து, தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு மூவர் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனையறிந்த உறவினர்கள், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மூவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி, மருத்துவமனையிலிருந்து சத்ரியனின் உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த வட்டாட்சியர் ராஜராஜன், தருமபுரி நகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடனடியாக கைது செய்தால் மட்டுமே, சாலை மறியலைக் கைவிடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சேலம் பிரதான சாலையில் போக்குவரத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றிவிடப்பட்டது. தொடர்ந்து கடிதத்தை வைத்து, விசாரணை நடத்தி வருவதாகவும், கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடலை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முதல்வரின் தனிப்பிரிவில் அளித்த மனுவை வாபஸ் வாங்கு.. மிரட்டும் காவலரின் ஆடியோ ரிலீஸ்..