திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (42). லாரி ஓட்டுநரான இவர், ஆந்திராவிலிருந்து கேரளாவிற்கு தனது எருமை மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு சென்றார். இந்த லாரியில் தேவகோட்டம்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார், ஆந்திராவைச் சேர்ந்த ஐந்து பேர் பயணித்தனர்.
இந்த லாரி நள்ளிரவில் தருமபுரி-சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது, இந்த லாரிக்குப் பின்னால் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வசந்த் குமார் பெங்களூரிலிருந்து திருச்சிக்கு பெயிண்ட் லாரியை ஓட்டி வந்தார்.
எதிர்பாராத விதமாக பெயிண்ட் லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது இடதுபுறமாக மோதியது. அதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அருகில் இருந்த கடையில் உள்நுழைந்து அங்கிருந்த வீட்டின் சுவரை இடித்துக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் லேசான காயம் அடைந்தனர். தகவலறிந்த தொப்பூர் காவல் துறையினரும் அக்கம்பக்கத்தினரும் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் லாரியில் இருந்த 14 எருமை மாடுகள் விபத்தில் சிக்கி உயிரிழந்தன. இதுகுறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் 7 வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து - மூவர் பலி