கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடகா அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் கபினி அணையில் இருந்து வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் இன்று காலை ஒகேனக்கல்லுக்கு வரக்கூடிய நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் மூன்றாவது நாளாக தடை விதித்துள்ளது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன.
மேலும், ஒகேனக்கலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளை பென்னாகரம் மடம் பகுதியிலேயே போலீசார் அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் தருமபுரி மாவட்ட காவல்துறையினர், தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் சென்ற ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்தது குறிப்பிடத்தக்கது.