சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகின்றது. முதற்கட்ட படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூரில் துவங்கியது.
கடலூர் - புதுவை எல்லையில் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள அழகியநத்தம் பாலம் பகுதியில் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இன்று ரஜினிகாந்த் நடித்த சண்டை காட்சிகள் இந்த பாலத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. ரஜினியுடன் துணை நடிகர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டுள்ளனர்.
படையப்பா படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி முதல் முதலாக கடலூர் மாவட்டத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் அழகிய நத்தம் பகுதிக்கு வந்தாலும் ஒரு கிலோமீட்டருக்கு முன்பே காவல்துறையினர் மற்றும் பவுன்சர்கள் அவர்களை உள்ளே விட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
அழகியநத்தம் பாலம் பகுதியில் யாரும் அனுமதிக்கப்படாததால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் ரஜினியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இதையும் படிங்க: ஜான்வி கபூரின் ’மிலி’ படத்தின் டீசர் வெளியானது...