கடலூர் முதுநகர் அடுத்த காரைக்காடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன், சிவானந்தபுரத்தில் உள்ள காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துவருகிறார். அதே வகுப்பில் படித்துவந்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி விட்டு வீட்டிறக்குச் செல்லும் வழியில் இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை பள்ளியில் இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாகியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த மாணவன், தான் வைத்திருந்த பிளேடால் காரைக்காடு மாணவனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு, பலத்த காயமடைந்த மாணவனை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர், மருத்துவமனைக்கு வந்த பள்ளி நிர்வாகத்தினர், சிகிச்சை பெற்று வந்த மாணவனை சந்தித்து, வகுப்பில் பலகையில் இடித்துக் கொண்டதால் இந்த காயங்கள் ஏற்பட்டது என காவல் துறையிடம் கூறவேண்டும் எனவும், இல்லையென்றால் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிடாமல் செய்துவிடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர்.
படிப்பு நின்றுவிடுமோ என்ற அச்சத்தில், அந்த மாணவன் காவல் துறையினரிடம், கீழே விழுந்துவிட்டேன் என்று பொய் சொல்ல முயன்றுள்ளார். ஆனால், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், பள்ளியில் சக மாணவன் தனது சாதியின் பெயரைச் சொல்லி திட்டியதாகவும், அதனால் தான் அவனை அடித்ததாகவும், அதற்கு அம்மாணவன் தன்னை பிளேடால் வெட்டியதாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த அந்த மாணவனைப் பிடித்து விசாரணை நடத்தியதில் ‘ஆத்திரத்தில் வெட்டிவிட்டேன்’ என்று கூறியுள்ளார். பின்னர், பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், எஸ்.சி, எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அம்மாணவரைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல் - தேடுதல் வேட்டையில் போலீஸ்!