கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள குருங்குடி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிற்சாலை உரிமையாளர் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். இவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவியாக தமிழ்நாடு அரசு சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு வழங்கும் நிவாரண உதவியை அதிகரித்து வழங்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''கடலூர் குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் ஒன்பது பெண்கள் பலியான செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு மாதங்கள் வருமானமின்றி இருந்து வந்து மீண்டும் வேலையைத் தொடங்கிய அன்றே விபத்து ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ''காட்டுமன்னார்கோயிலில் ஏற்பட்ட வெடிவிபத்து செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை போதுமானதல்ல. இதை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த ஒன்பது பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ''குறுங்குடி வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 25 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பினையும் வழங்க வேண்டும். தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படுகின்ற பட்டாசு ஆலைகளை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ''கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தது குறித்து அறிந்து நான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். இந்த வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழ்நாடு மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறேன்'' எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதலமைச்சர் அறிவிப்பு!