கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 7ஆம் தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கடலூரில் உள்ள 143 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு ஏழு கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின.
இருப்பினும் கடலூர் மாவட்ட மதுப் பிரியர்கள் புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறப்பார்கள் என்று ஆவலாக இருந்தனர். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 62 நாள்கள் கழித்து புதுச்சேரியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. மதுபானங்கள் 25 விழுக்காடு கரோனா வரியுடன் விற்கப்படுகிறது. இதனால் மதுப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விலை உயர்வால் கடலூர் மாவட்ட மதுப் பிரியர்கள் மது பானங்கள் குடிப்பதில் இருந்து சாராயம் குடிப்பதற்கு மாறிவிட்டனர்.
புதுச்சேரி மாநில எல்லையான ஆராய்ச்சிகுப்பம் என்ற பகுதியில் மட்டுமே சாராயக்கடை திறக்கப்பட்டுள்ளது. அங்கு சாலை மார்க்கமாக செல்வதற்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் தங்களது உயிரைப் பணயம் வைத்து மறுகரையில் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்து விட்டு வருகின்றனர். இதனை காவல் துறையினர் தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: மதுரையில் கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்பனை: ஒருவர் கைது!