கடலூர் மாவட்டம், துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பைச் சேர்ந்தவர் முருகதாஸ். இவர் சவுதியில் பணிபுரிந்து வந்த நிலையில், இவரது மனைவி சுமிதாவும், குழந்தைகளும் கடலூரிலேயே வசித்து வந்தனர். முருகதாஸ் சவுதியிலிருந்து விடுமுறைக்காக வீட்டிற்கு வந்து மனைவி, குழந்தைகளுடன் தங்கியிருந்த நிலையில் திடீரென காணாமல் போனார்.
இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் வெளிநாடு சென்றுவிட்டதாகக் கருதியுள்ளனர். இதற்கிடையே, முருகதாஸின் தம்பி சுமேர், அவரது மனைவி சுமிதா ஆகியோரும் திடீரென மாயமாகினர். சந்தேகமடைந்த முருகதாஸின் தாயார், இவ்விவகாரம் தொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், தனது மகன் முருகதாஸ் காணாமல் போன அன்றே தனது இரண்டாவது மகனும், மருமகளும் காணாமல் போயுள்ளனர். இதனால், பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காணாமல் போன முருகதாஸை கண்டுபிடித்து தர வேண்டுமென கூறியிருந்தார்.
இந்நிலையில், கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால் சுதர் தலைமையில் தனிப்படை அமைத்து காணாமல் போனவர்கள் குறித்து பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், சுமேர், சுமிதா இருவரும் திருவனந்தபுரத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் முருகதாஸ் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், சுமேர், சுமிதா ஆகிய இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது முருகதாஸுக்குத் தெரிய வந்ததால், அவர் அதனைக் கண்டிக்கவே, இருவரும் சேர்ந்து அவரது கழுத்தை துண்டால் நெரித்துக் கொன்று வீட்டினுள் புதைத்துவிட்டு கேரளாவிற்குத் தப்பியதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுமேர், சுமிதா இருவரும் கடலூருக்கு அழைத்து வரப்பட்டு, முருகதாஸ் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரது உடலை காவல் துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.