கடலூர்: கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு அரசின் உத்தரவின்பேரில் ஒன்பது முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் என 496 பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன.
நோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதற்கிடையே கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு ஏதுமில்லை
இது குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் கூறும்போது, ”மஞ்சக்குப்பத்தில் உள்ள வேணுகோபால்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியைக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளாகியுள்ளவர் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியை.
வழக்கமாக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நிலையில் பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால் பாடம் நடத்துவது தொடர்பாக வகுப்புகளுக்குச் செல்லவில்லை. இந்நிலையில் உடல்நிலை பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் பரிசோதித்ததில் கரோனா உறுதிசெய்யப்பட்டதாக சம்பந்தப்பட்ட பள்ளி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது பள்ளிக்கு வரும் மாணவிகள் ஒன்பதாம் வகுப்பு முதல் வருவதால் நேரடி பாதிப்பு ஏதுமில்லை. மற்ற ஆசிரியர்களுக்கு ஏதேனும் அறிகுறி, உடல்நிலை சரியில்லை என்றால் உடனடியாகப் பரிசோதனை செய்யவும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத் துறைக்கு இது சம்பந்தமாகச் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கனிசமாக உயரும் கரோனா - வடமாநிலத்தில் புதிய வைரஸ்