கடலூர்: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பெரும்பான்மை இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் கடந்த 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை அன்று (பிப்.22) வாக்கு எண்ணும் இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையை தேர்தல் அலுவலர்கள் திறக்க சென்றனர். ஆனால், அப்போது அந்த அறையின் சாவி தொலைந்ததால் சுமார் 35 நிமிடத்திற்குப் பிறகு இயந்திரம் மூலம் பூட்டை அறுத்துத் திறந்தனர். அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இதில், கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 30 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. அதிமுக 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் நேற்று (பிப்.23) அதிமுக கடலூர் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அதிமுக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், கடலூர் மாநகராட்சியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையைத் திறந்து திமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டுள்ளதாகவும், அதனால் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் கடலூர் உழவர் சந்தை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரைப் பேச்சு வார்த்தை நடத்தி கலைத்தனர். இதனைத் தொடர்ந்து எம்.சி. சம்பத் தலைமையில் அதிமுகவினர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதால் கடலூர் மாநகராட்சியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.சி சம்பத், "நடந்து முடிந்த கடலூர் மாநகராட்சி மாமன்ற தேர்தலில் திமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் அரை பூட்டு சாவி தொலைந்து விட்டது என்று தெரிவித்து அதிமுகவினரை அழைக்காமல் அவர்களே இயந்திரம் மூலம் அறுத்துள்ளனர்.
இதன் மூலம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளது தெரிய வருகிறது. இதனால் கடலூர் மாநகராட்சிக்கு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்திட வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!