கடலூர்: கடலூர் சில்வர் பீச் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடமாநிலத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் சுற்றி வந்ததாக கூறுகின்றனர். அப்போது சில்வர் பீச் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், அந்த மூதாட்டியை மீட்டு விசாரித்துள்ளார்.
ஆனால் மொழி பிரச்னையால், அவரிடம் சரிவர விசாரிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த மூதாட்டிக்கு இந்தியும் பேச தெரியாத நிலையில், போஜ்புரி என்ற ஒரு மொழியை பேசியுள்ளார். இதனால் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த மூதாட்டி, கடலூர் முதுநகர் முதியோர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். பின்னர் கடலூர் வங்கி ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் போஜ்புரி மொழி தெரிந்தவராக இருந்த காரணத்தினால், அவரை வைத்து அந்த மூதாட்டியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையடுத்து பல்வேறு அதிகாரிகள் மூலம் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் பன்வாரி பகுதியைச் சேர்ந்த குஷ்மரணி (74) என்பதும், ராமேஸ்வரத்திற்குச் சென்றுவிட்டு ரயிலில் சொந்த ஊருக்கு திரும்பியபோது வழி தெரியாமல் கடலூரில் இறங்கியதும், செலவுக்கு பணம் ஏதும் இல்லாததால் கடலூரில் சுற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலீசார், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து மூதாட்டியின் குடும்பத்தினர் நேற்று கடலூர் வந்து சேந்தனர். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மூதாட்டியின் பயணச் செலவுக்கு ரூ.3 ஆயிரம் கொடுத்ததுடன், அவரது குடும்பத்துடன் மூதாட்டியை அனுப்பி வைத்துள்ளார்.
அப்போது மூதாட்டியின் குடும்பத்தினர் அவருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போலீஸ் ஜீப்பில் மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: லியோ பட வெளியீடு; அரசின் கட்டுப்பாடுகளை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைப்பு!