கடலூர்: முதுநகர் சிங்காரத்தோப்பு பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் ஆகியோர் மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
அங்கு மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் சரியான முறையில் உணவு வழங்கப்படுகிறதா? என்பதனை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆய்வு செய்தார். அந்த பள்ளியில் 11 மாணவர்கள் படித்து வரும் நிலையில், தினந்தோறும் 11 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும்.
ஆனால் குறைந்த அளவில் காலை உணவு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த மேயர் சுந்தரி ராஜா, எத்தனை மாணவர்கள் இந்த பள்ளியில் படிக்கின்றனர்?, உணவு ஏன் குறைந்த அளவில் உள்ளது? என அங்கிருந்த ஆசிரியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் இல்லாததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் எங்கே? என கேட்டு கொண்டிருந்தார்.
அப்போது தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்ததைப் பார்த்த, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஏன் பள்ளிக்கு தாமதமாக வருகிறீர்கள்? இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஏன் சரியான முறையில் காலை உணவு வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அப்போது நான்கு மாற்று திறனாளிகள் மாணவர்கள் உணவு வாங்கிக் கொண்டு சென்று விட்டனர். மேலும் ஐந்து மாணவர்கள் உணவு அருந்தி விட்டனர். இரண்டு மாணவர்கள் பின்பு வந்து சாப்பிடுவார்கள் என தெரிவித்தார்.
காலை உணவு வழங்கும்போது தலைமை ஆசிரியர் பணியில் இருக்க வேண்டும். அதற்கு மாறாக ஏன் மாற்று ஆசிரியர் பணியில் இருந்தார் என மாநகராட்சி மேயர் கேட்டார். அப்போது தலைமை ஆசிரியர் நாங்கள் சுழற்சி முறையில் ஒரு நாள் ஆசிரியரும், ஒரு நாள் நானும் காலை உணவு வழங்கும் போது இருப்போம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மேயர் சுந்தரி ராஜா, பள்ளி மாணவர்கள் இருக்கும் பள்ளிக்கூடத்தில் போதுமான காலை உணவு இல்லை. மேலும் தலைமை ஆசிரியர் சரியான நேரத்திற்கு பணிக்கு வரவில்லை என்பதை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார். இது குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: "வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள பேரிடர் மீட்புக்குழு தயார்" - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!