கடலூர் திருப்பாதிரிபுலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி நேற்று (செப்டம்பர் 14) பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது, "நாடு முழுவதும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல் ) செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை மூன்று சுற்றுகளாக வழங்கப்படுகிறது.
இதில் முதல் சுற்று செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையிலும், மூன்றாம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் செப்டம்பர் 28 ஆம் தேதியன்று அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படுவதுடன் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையினால் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
6 முதல் 59 மாதம் வயதுடைய குழந்தைகள், 10ல் 7 குழந்தைகள் (70 சதவீதம் ) ரத்த சோகையினால் பாதித்துள்ளனர். முக்கியமாக, கிராமப்புறங்களில் அதிக அளவிலான குழந்தைகள் பாதித்துள்ளார்கள்.
15 முதல் 19 வயதினரிடையே, 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் ரத்த சோகையினால் பாதித்துள்ளார்கள். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் உடல் வளர்ச்சி குன்றியும், 43 சதவீதம் எடை குறைவாகவுள்ளனர்.
கடலூர் சுகாதார மாவட்டத்தில் 6 லட்சத்து 884 குழந்தைகளுக்கு, 2 ஆயிரத்து 23 அங்கன்வாடி மையங்களில், 319 துணை சுகாதார நிலையங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படவுள்ளது.
இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 எம்.ஜி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 எம்.ஜி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படும்.
இந்த மாத்திரைகளை வழங்குவதற்கு பொதுசுகாதாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டப்பணிகள், சமூக நலத் துறை, ஊரக வளர்ச்சித் துறை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், ஊட்டச்சத்து துறைகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 655 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இம்முகாமில் மாத்திரைகள் வாங்க வரும் பெற்றோர்கள், குழந்தைகள் தகுந்த இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.