தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை வரவேற்ற அதே சமயத்தில் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முற்றிலும் புறக்கணிக்கவேண்டும் என தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் மும்மொழிக் கொள்கைதிட்டத்தை நிராகரித்து இருமொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் எனக் கூறியதை வரவேற்கிறோம். இந்த தேசிய கல்விக் கொள்கையால், மத்திய அரசு மட்டும்தான் எல்லா முடிவுகளையும் எடுக்கமுடியும். மாநில அரசால் இதில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் போகும்.
ஒட்டுமொத்தமாக குலக்கல்வி முறையைக் கொண்டு வரும் நோக்கோடு இந்த புதிய கல்விக்கொள்கை உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த இருமொழிக் கொள்கையை முழுமையாக வரவேற்கிறோம்.
புதிய கல்விக் கொள்கையை ஆய்வுசெய்ய குழு அமைப்பதாக முதலமைச்சர் கூறுவது மத்திய அரசையும், தமிழ்நாட்டு மக்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் உள்ளது. இந்தவிவகாரத்தில் இரட்டை நிலையை கடைபிடிக்காமல் தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு வரை கட்டாயம் தேர்ச்சி என உள்ளது. ஆனால் இந்த புதிய கல்விக் கொள்கை 5, 8, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைக்கப்படும் எனக் கூறுகிறது. இதனால், மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகும்" என்றார்.
இதையும் படிங்க: அரசுக்கு எதிராகப் பதிவிட்டால் கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்க திமுக மனு