கடலூர்: புதிய காவல் கண்காணிப்பாளராக சக்திகசன் பொறுப்பேற்றுக் கொண்டதையடுத்து மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியிருந்தார்.
அந்த வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின்பேரில் விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் ஆய்வாளர் விஜயரங்கன், உதவி ஆய்வாளர்கள் ஜம்புலிங்கம், கணேசன், தனிப்பிரிவு தலைமைக் காவலர் பாலமுருகன் உள்ளிட்டோர் விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முருகன்குடியைச் சேர்ந்த திருஞானம், விருத்தாசலம் புதுப்பேட்டை தெருவைச் சேர்ந்த சண்முகம், ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் காந்திநகரில் சந்தேகப்படும் படியில் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.
இதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையைச் சேர்ந்த சிவபாலன் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதைப்பொருளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ஹான்ஸ் பொட்டலங்களை கைப்பற்றியதுடன், அந்நபரை கைதுசெய்தனர்.
மேலும் தொரவலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்ராஜ் என்பவரிடம் 20 மதுபாட்டில்களை காவல் துறையினர் கைப்பற்றி கைதுசெய்தனர்.
இதையடுத்து நடியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அந்தப் பகுதியிலிருந்து கூழாங்கற்களை லாரி மூலம் கடத்தி வந்துள்ளார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், லாரியை பறிமுதல்செய்து, தமிழ்செல்வனை கைதுசெய்தனர்.
புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஒரேநாளில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பேரை கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க: இருதரப்பினரிடையே மோதல்: இளைஞருக்கு அரிவாள் வெட்டு