கோயம்புத்தூரை மிரட்டும் கரோனா
தமிழ்நாட்டை பொறுத்தவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் உச்சத்தில் இருந்து வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றவர்களுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகின்றனர். மலை கிராமங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு உணவு கிடைக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
46 நண்பர்கள் வாட்ஸ்அப் குழு
சின்னதடாகம் பகுதியில் உள்ள 46 நண்பர்கள் என்ற குழுவினர் தினந்தோறும் குறைந்தது 1,000 பேருக்கு உணவு வழங்கி வருகின்றனர். அதில் திருநங்கைகள், மலைவாழ் மக்கள், செங்கல் சூளை தொழிலாளர்கள் ஆகியோருக்கு இருசக்கர வாகனத்திலேயே தேடிச்சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
இளைஞர்களின் வருகைக்காக காத்திருக்கும் ஆதரவற்றோர்
தற்போது இவர்களின் உணவிற்காக பலரும் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பொதுமக்களும் அவர்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இக்குழுவினர்களுக்கென்று தனி அலுவலகமோ தனிப்பட்ட இடமோ இல்லை. இருப்பினும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர். 2018இல் தொடங்கப்பட்ட இந்த குழு, அப்போது இருந்தே பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.
இளைஞர்களின் கையில் எதிர்காலம்
இது குறித்து அக்குழுவைச் சேர்ந்த ப்ரணிஷ் பேசுகையில், "46 நண்பர்கள் என்ற குழு 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. குழு தொடங்கிய நாளில் இருந்தே எங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேவையான உதவிகள், விளையாட்டு மைதானங்களை தூய்மை செய்தல் போன்றவற்றை செய்து வருகிறோம்.
எங்களிடம் பலரும் உணவு தேவைப்படுகிறது என்று கூறுவர். அப்பொழுது நாங்கள் ஒரு முடிவு எடுத்தோம். நண்பர்கள் அனைவரும் இணைந்து பொதுமக்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தோம். கிராம மக்களும் உதவி செய்ய முன்வந்தனர். தற்பொழுது 20 நாட்களாக ஊர் மக்கள் உதவியோடு நாளொன்றுக்கு ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறோம். மலைவாழ் கிராமங்களில் மளிகை பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறோம்.
அதுமட்டுமின்றி இன்னும் ஒருபடி மேலாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக கரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது எங்களிடம் இருக்கின்ற பணத்தை வைத்து ஒருவரை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி மூன்றாம் அலை வர உள்ளதால் குழந்தைகளின் பெற்றோர்கள் பெயரில் காப்பீடு செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதற்கு மாநகராட்சி ஆணையரும் உதவி செய்கிறார். அப்துல் கலாம் கூறியது போல இளைஞர்களின் கையில் எதிர்காலம் உள்ளது. இதுபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன் வந்தாலே, அனைத்தையும் சாதிக்க முடியும்.
நண்பர்களுடன் கைகோர்த்த தோழி
அதனைத் தொடர்ந்து பேசிய அப்பகுதியைச் சேர்ந்த இனியா, "எங்கள் பகுதியில் 46 நண்பர்கள் என்ற குழுவினர் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து சமூக சேவை ஆற்ற ஆர்வம் வந்தது. பின்னர் பெற்றோர்களின் சம்மதத்துடன் நானும் அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். என்னைப் போல் பல்வேறு பெண்களும் முன்வந்தால் அதிகமான சேவைகளை மக்களுக்கு செய்ய முடியும்" என்றார்.
இளைஞர்களுக்கு உதவும் பொதுமக்கள்
மேலும் முருகேசன் என்பவர் கூறுகையில், "இப்பகுதியில் 15 ஆண்டுகளாக உணவகங்களில் வேலை செய்து வருகிறேன். 46 நண்பர்கள் குழுவினர் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். என்னால் முடிந்த உதவியை செய்து வருகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: கல்லணையில் காலடி வைக்கும் ஸ்டாலின்