கோயம்புத்தூர்: திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில், நீரில் மூழ்கி பலியான ஸ்ரீரங்கம் வேத பாடசாலை மாணவர்கள் மூன்று பேரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு, பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திருச்சி, ஸ்ரீரங்கம் மேலவாசல் பட்டர்தோப்பு பகுதியில், 'ஆச்சார்யா ஸ்ரீமான் பட்டர் குருகுலம்' என்ற வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறையையொட்டி இங்கு நடக்கும் சிறப்பு வகுப்புகளில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வேதம் பயின்று வருகின்றனர்.
இந்த குருகுலத்தில் பயிற்சி பெறும் மாணவர்கள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிப்பது வழக்கம். அதுபோல, மே 14ம் தேதி அதிகாலை ஈரோடு, நசியனூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (17), திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் (13), ஹரிபிரசாத் (14), ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த வெங்கடகிரிதர் தாய்சூரிய அபிராம் (14) ஆகிய நான்கு பேர் கொள்ளிடம் ஆற்றில் குளித்து உள்ளனர்.
பொதுவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் இருக்காது. அதுவும் கோடை காலம் என்பதால், தண்ணீர் குறைவாக இருக்கும். அந்த நம்பிக்கையில் தான் சிறுவர்கள் அங்கு குளித்துள்ளனர். ஆனால், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால், கொள்ளிடத்தில் குளித்துக் கொண்டிருந்த அந்த நான்கு சிறுவர்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் கோபாலகிருஷ்ணன் தவிர மற்ற மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. பிள்ளைகளைப் பறிகொடுத்துள்ள பெற்றோர்களின் மனம் எப்படி தவிக்கும் என்று நினைக்கும்போதே தாங்க முடியாத துயரம் ஏற்படுகிறது.
மூன்று சிறுவர்களின் உயிரிழப்புக்கு, எவ்வித முன்னறிவிப்புமின்றி திடீரென கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதே காரணம். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பொறுப்பின்மைக்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் பொறுப்பின்மையால் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
கொள்ளிடம் போன்ற ஆறுகளில் தண்ணீர் திறந்து விடுவது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்க வேண்டும். வழக்கமாக மக்கள் குளிக்கும் பகுதிகளில், யாரையும் குளிக்க விடாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். எச்சரிக்கை பலகைகளையும் வைக்க வேண்டும். இனி இது போன்ற உயிரிழப்புகள் நடக்காமல் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுடன் முதலில் கூட்டணிவைத்தது திமுக தான் - வானதி சீனிவாசன் CM-க்கு பதில்!