கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி இன்று (பிப்.04) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், காலை முதலே கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கோயம்புத்தூர் தெற்கு மண்டல அலுவலகத்தில் 38ஆவது வார்டிற்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் நூர் முஹம்மது, ராஜா வேடமணிந்து வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதேபோல் 94ஆவது வார்டு அமமுக வேட்பாளர் நபீக், அவரது மகளுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வேடமணிந்தும்; அவரைச் சுற்றி பாதுகாவலர் இருப்பது போன்றும் வேடமணிந்த குழந்தைகளுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேபோன்று 95ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜசேகர், அம்பேத்கர், நேதாஜி, பேரறிஞர் அண்ணா, காமராஜர் வேடமணிந்த ஆதரவாளர்களுடன் அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வடக்கு மண்டல அலுவலகத்தில் 19ஆவது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமுதகுமாரி, பாரதமாதா வேடமணிந்து வந்து அவரது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மேற்கு மண்டல அலுவலகத்தில் பாஜக சார்பில் போட்டியிடக் கூடிய 36ஆவது வார்டு வேட்பாளர் ஜெயந்தி, 37ஆவது வார்டு வேட்பாளர் காயத்ரி, 38ஆவது வார்டு வேட்பாளர் சுஜாதா, 39ஆவது வார்டு வேட்பாளர் சௌமியா ராணி ஆகியோர் மோடி வேடமணிந்த ஆதரவாளர்களுடன் அவர்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க: 'சமூக வலைதள கணக்குகளில்கூட என்னைத்தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்; விரைவில் நிவர்த்தி செய்வேன்'