இந்திய விமானப்படையின் 87ஆம் ஆண்டு விழா வருகிற அக்டோபர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதனை ஒட்டி விமானப் படை சார்பில் இந்தியா முழுவதும் உள்ள விமானப்படைத் தளங்களில் விமானக் கண்காட்சி மற்றும் விமானப் படையில் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு போபாலில் விமான சாகச நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் விமானங்களின் கண்காட்சியும், சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விமானங்கள் வானில் குட்டிகரணம் அடித்து சாகசங்களை செய்து காட்டின. மேலும், தேஜஸ் ஏ.என் 32, எம்.ஜ.17, சாரங் மார்க் 1, உள்பட பல்வேறு ராணுவ விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
விமானத்தில் பயன்படுத்தப் படும் நவீன ரக இயந்திரத் துப்பாக்கிகள், ஏவுகணைகள், துப்பாக்கி குண்டுகள் போன்றவையும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் விமானங்களின் வகைகள் அதன் தாக்குதல் திறன் குறித்து தெரிந்து கொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: நவராத்திரியை முன்னிட்டு களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!