கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததால் அங்குள்ள மாணவர்கள் 15 கி.மீ., தொலைவிலுள்ள அவிநாசி மற்றும் தெக்கலூர் பகுதிக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் எலச்சிபாளையம் கிராம மக்கள் முயற்சியின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் எலச்சிபாளையம் நடுநிலைப் பள்ளிக்கு அருகேவுள்ள 1.50 ஏக்கர் பரப்பிலான நிலத்தை அரசுக்கு இலவசமாக வழங்கினார்.
3 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் மேல்நிலைப்பள்ளி கட்ட தானமாக வழங்கியதற்கு கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், எலச்சிபாளையத்தில் அவர் தானமாக வழங்கிய நிலத்தில் இன்று (நவ.29) ராமமூர்த்திக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் தொழிலதிபர் ராமமூர்த்தி அவரது மனைவி பாக்கியம், அவரது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிராம மக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த பாராட்டு விழாவில் பேசிய ராமமூர்த்தி, “எனது தந்தை ஏற்கனவே ஆரம்ப பள்ளிக்காக நிலம் வழங்கிய நிலையில் ஏழை மாணவர்கள் கல்வி பயில தன்னால் முடிந்த சிறு உதவியாக இந்த நிலத்தை வழங்கியுள்ளேன்.
விரைவில் இங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று, வரும் கல்வியாண்டு முதல் பள்ளி செயல்பட அனைவரும் முயற்சிகள் எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். மேலும் மேல்நிலை பள்ளி கட்டுவதற்கு அனைத்து விதமான உதவிகளும் வழங்க தயாராக இருப்பதாக கிராம மக்கள் முன்னிலையில் அவர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகளும், மரம் நடும் விழாவும் நடைபெற்றது.
இதையும் படிங்க: திருமண உடையோடு பணிசெய்த மணமகன்: குவியும் பாராட்டு!