கோவை: கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தனியார் நகைகடையில் இருந்து 6.5 கிலோ தங்க நகைகளை நடராஜ் என்பவர் ஹைதராபாத் கொண்டு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் ஆகியும் நகைக்கடைக்கு நகையும் செல்லவில்லை. அவரிடமும் இருந்து எந்த தகவலும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த நகைக் கடை உரிமையாளர் பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் நடராஜை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் ஓடும் பேருந்தில் தூங்கிய நேரத்தில் நகைகள் திருடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அதன்பின் தனிப்படை போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பேருந்தில் பயணம் செய்த அனைவரின் தகவல்களை திரட்டியுள்ளனர். அப்போது நடத்துனரிடம் விசாரித்ததில் ஒரு பயணி மட்டும் ஹைதராபாத் வருவதற்கு முன்பே பதட்டத்துடன் இறங்கி சென்றதாக தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கோவையிலிருந்து ஹைதராபாத் வரைக்கும் இருக்ககூடிய டோல்கேட் சிசிடிவி காட்சிகளை போலீசார் சேகரித்துள்ளனர். அப்போது பேருந்தை பின் தொடர்ந்து ஒரு கார் நீண்ட நேரமாக வந்திருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த காரின் விவரங்களை சேகரித்தப் போது மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் கஞ்சர்சேர்வா ஊரில் உள்ளவர்களால் நகை திருடப்பட்டதை கோவை போலிசார் கண்டுபிடித்தனர்.
இதனை அடுத்து கடந்த நவம்பர் 6ஆம் தேதி தனிப்படை போலீசார் மத்திய பிரதேசம் சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் கிராமத்திற்கு சென்று நகைகளை திருடிய சின்னு (எ) முஸ்தாக் என்பவரை பிடிக்க முயன்றபோது அங்கிருந்தவர்கள் நாட்டுத்துப்பாக்கி மற்றும் கற்களை கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சின்னு தப்பி ஓடியுள்ளார். அப்போது உள்ளூர் போலீசார் துப்பாக்கி கொண்டு ஊர்மக்களை கட்டுப்படுத்த கோவை போலீசார் தப்பி ஒட முயற்சித்த குற்றவாளியை துரத்தி பிடித்து கைது செய்தனர். அதோடு கொள்ளை போன முழு தங்கத்தையும் மீட்டுவந்தனர். இந்த முயற்சியில் ஈடுபட்ட காவலர்களான ரமேஷ், மாரிமுத்து, கார்த்தி, உமா ஆகியோரை டி.ஜி.பி சைலேந்திரபாபு டிசம்பர் 11ஆம் தேதி நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை பாலமலை வனப்பகுதியில் கஞ்சா வளர்ப்பு; முதியவர் உட்பட 4 பேர் கைது