கோவை: கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டு தடையினை நீக்கக்கோரி போராட்டம்,கணியூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் மக்களுக்கு கட்டண விலக்கு அளிக்கக்கோரி மேற்கொண்ட போராட்டம் உள்ளிட்டப் போராட்டங்களை முன் நின்று நடத்திய சமூக ஆர்வலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை ரவுடிகள் பட்டியலில் சேர்த்தனர்.
இதனையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு போலீசாரிடம் சமூக ஆர்வலர்கள் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு விவசாய சங்கத்தினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுகுறித்து போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில் சமூக ஆர்வலர்களைத்தொடர்ந்து ரவுடிப்பட்டியலில் வைத்திருக்கும் போலீசாரைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் நூதன முறையில் கருமத்தம்பட்டி போலீசாருக்கு பூங்கொத்து கொடுத்து, இனிப்பு வழங்கி, மரியாதை செய்ய உள்ளதாக அறிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று பூங்கொத்து இனிப்புகள் கொடுப்பதற்காக விவசாய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கருமத்தம்பட்டி காவல் நிலையம் வந்தனர். அவர்களை காவல் நிலைய வாசலில் தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களிடம் இது குறித்து கேட்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசாருக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகளை பொதுமக்கள் வழங்கிய நிலையில், அதனை ஏற்க மறுத்த போலீசார் மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகி ஈசன் கூறுகையில், ’மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும். போலீசார் அதனை செய்ய மறுத்ததால் அடுத்த கட்டமாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல்துறை தலைவரை நேரில் சந்தித்து முறையிட உள்ளோம்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராசம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!