கோயம்புத்தூர்: கொடிசியா வளாகத்தில் வங்கிகள் சார்பில் மாபெரும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, சுமார் 90 ஆயிரம் பேருக்கு 3ஆயிரத்து 479 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார். மாநில அளவிலான வங்கிகள் குழு (SLBC) மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மொத்தம் 948 வங்கி கிளைகள் வாயிலாக இந்த கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
முக்கியமாக சுய தொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர், சாலையோர வியாபாரிகள், வேளாண் உற்பத்தியாளர்கள் , பட்டதாரிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றோருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், அமுல் கந்தசாமி, ஏ.கே செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். அவர் கூறியதாவது, “வங்கியை தேடி அலைகின்ற காலம் மாறி வங்கிகள் தேடி வந்து கடன் கொடுக்கின்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பலரும் பலன் பெற்று வருகின்றனர்” என்றார். நிர்மாலா சீதாராமன் பேசிக்கொண்டிருக்கும்போதே, விழாவில் கலந்து கொண்ட சாய்பாபா காலனியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற தொழில்முனைவோர், தனக்கு வங்கி கடன் உதவி அளிக்கவில்லை எனவும் வங்கி கடன் வழங்க கோரி விண்ணப்பித்து பல மாதங்களாகியும் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கவனத்தை ஈர்க்க ஒரு கையை மட்டும் தூக்கிக் கொண்ட படி நின்றார். இது தொடர்பாக ஊடகங்களிடம் தொழில் முனைவோர் சதீஷ் பேச வந்த பொழுது அங்கு இருந்த பாஜகவினரும், வங்கி அதிகாரிகளும் அவரை பேச விடாமல் தடுத்தனர். இதனால் நிகழ்ச்சியின் போது சலசலப்பு ஏற்பட்டது. இதைக் கவனித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சதீஷை மேடைக்கு அழைத்து அவரது கோரிக்கையை கேட்டார்.
மேடையில் ஏறிய சதீஷ், தனக்கு கடன் உதவி மறுக்கப்பட்டது குறித்து தெரிவித்தார். இது குறித்து விசாரிப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் இது குறித்து விசாரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த 22 ஆம் ஆண்டு கிரெடிட் கார்டு பணம் முறையாக செலுத்தவில்லை, போதிய அளவு வருமானம் இல்லை என்ற காரணத்தால் கடன் வழங்க முடியாது என கூறியுள்ளதை தற்போது வங்கி தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ளது.
ஆனால், சதீஷ்குமார் கடந்த ஆறு மாதங்களாக தனக்கு கடன் வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் கூறி வருவதாகவும் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவையில் நிர்மலா சீதாராமனை சந்தித்த அதிமுக எம்எல்ஏக்கள்.. நடந்தது என்ன?