சென்னை: கட்டடங்கள் மற்றும் வீடுகளில் உள்ள கழிவுநீர் பாதை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை உள்ளே இறங்கி சுத்தம் செய்ய தனி நபர்களை நியமிக்க அரசு தடை விதித்துள்ள நிலையில் சென்னை மாநராட்சி வழிகாட்டு நெறிமுறைகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி வீடுகளில் உள்ள கழிவுநீர்த்தொட்டி மற்றும் கழிவு நீர் பாதையினுள் இறங்கி சுத்தம் செய்ய எந்த ஒரு தனி நபரையும் நியமிப்பது சட்டவிரோதமானது மற்றும் தண்டனைக்குரிய குற்றம்.
ஒரு கட்டடத்தில் கழிவுநீர்த்தொட்டி அல்லது கழிவு நீர் பாதை சுத்தம் செய்யும்போது சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ வீட்டு உரிமையாளர் அல்லது கட்டட உரிமையாளர் அல்லது வாடகைக்கு குடியிருப்போர் அல்லது நிறுவனம் மற்றும் ஒப்பந்ததாரோ பொறுப்பாவார்கள்.
மேலும், கழிவுநீர்த்தொட்டி அல்லது கழிவுநீர் பாதை சுத்தம் செய்யும் நபர் மரணம் அடைந்தால் இறந்தவரின் குடும்பத்தைச்சார்ந்த வாரிசுதாரர்களுக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை செலுத்த வேண்டும் என்றும், கழிவுநீர் பாதை மற்றும் கழிவுநீர் தொட்டிகள் இயந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மூலம் கழிவுநீர் பாதை அடைப்பு அகற்றுவது மற்றும் கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்வதை கண்டறிந்தால் உடனடியாக 14420 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும், கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்துவதற்கு மற்றும் அடைப்பு அகற்றுவதற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீர் அகற்று வாரியத்தை 044-45674567 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தஞ்சாவூர் அருகே கடத்தி செல்லப்பட்டவர், சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை