கோயம்புத்தூர்: நவராத்திரி திருவிழாவின் நிறைவு நாளைக் கொண்டாடும் வகையில், இன்று (அக்.23) தமிழகம் முழுவதும் ஆயுதயூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொழில் சிறக்கவும், கல்வி மேம்படவும் இந்த நாளன்று நாம் பயன்படுத்தும், நமது வாழ்க்கையை முன்னேற்றும் அனைத்து ஆயுதங்களுக்கும் பூஜை செய்வது வழக்கம்.
எனவே இன்று ஏராளமானோர் தங்களது வாகனங்களுக்குப் பூஜை செய்து, ஆயுத பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் புதிதாக வாகனங்களை வாங்கும் பெரும்பாலானோர் பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பூஜை செய்து வழிபடுவது வழக்கம். குறிப்பாக ஆயுத பூஜை போன்ற பண்டிகை நாட்களில் வாகனங்களுக்குப் பூஜை போடுபவர்களின் எண்ணிக்கை அங்கு அதிக அளவில் இருக்கும்.
இந்நிலையில், சென்னை பாடிகார்ட் முனீஸ்வரர் கோயிலைப் போலவே, கோவை மாவட்டம் அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பிரசித்தி பெற்றது காக்காபாளையம் மேடு உதயமரத்து கருப்பராயர் கோயில். இந்த கோயிலில், அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் புதிதாக வாகனங்களை வாங்குவோர், பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதேபோல தொலைதூரம் பயணிக்கும் கால் டாக்ஸிகள், கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள், இங்கு தங்களது வாகனங்களை நிறுத்தி வழிபட்டுச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இங்கு வாகனங்களை நிறுத்தி வழிபட்டால், பயணம் எந்தவித தடங்களும் இன்றி பாதுகாப்பாக இருக்கும் என்பது ஓட்டுநர்களின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், ஆயுத பூஜை நாளான இன்று ஒட்டி கருப்பராயர் கோயிலில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வாழைமரம் கட்டியும், விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து வாகன உரிமையாளர்கள் வழிபட்டு வருகின்றனர். அதேபோல வாகனங்களின் சாவிகளை கருப்பராயர் முன்வைத்து, கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றி பூசணிக்காய் உடைத்து வழிபட்டுச் செல்கின்றனர்.
மேலும், இன்று இக்கோயிலில் வாகனங்களுக்குப் பூஜை செய்வதற்காக ஏராளமான கால் டாக்ஸிகள் மற்றும் கார்கள் வரிசை கட்டி அணிவகுத்து நிற்கின்றன. முன்னதாக கருப்பராயருக்கு மாலை அணிவித்துப் பொங்கல், சுண்டல், பொரி, அவல், பழங்கள் உள்ளிட்டவை படையல் இட்டு, சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
இதையும் படிங்க: சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை: தருமபுர ஆதீனத்தில் படையலிட்டு சிறப்பு வழிபாடு!