கோயம்புத்தூர்: கோவை சித்ரா பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு உள் நாட்டு விமானங்களும், சார்ஜா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளி நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம் மற்றும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கவும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
அதேபோல் பயணிகளின் உடமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், போதைப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. எனினும் பல்வேறு நூதன முறைகளில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதும், அதிகாரிகளின் சோதனையில் பிடிபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் ஷார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை கோவை விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை செய்யப்பட்டது.
இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 11 பயணிகளை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் பேண்ட் பாக்கெட், சூ, ஜீன்ஸ் பேண்ட் மற்றும் மலக்குடல் ஆகியவற்றில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்ததும், 11 பேரும் அரை கிலோ தங்கத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து 6.62 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 3.8 கோடி ரூபாய் இருக்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
தங்கம் கடத்தி வந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுணன் (43) என்பவரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தங்க கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டது வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Video: புற்றுக்கண் மாரியம்மன் முன்பு நடனமாடிய நாகம்.. வைரலாகும் வீடியோ!