கோவை தெற்கு சட்டப்பேரவைத்தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "உத்தரப்பிரதேச முதலமைச்சர் கோவை வருகையின்போது நடந்த விரும்பத்தகாத சம்பவத்தை வைத்து, பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது போல தவறாகச் சித்தரித்து எதிர்க்கட்சிகள் பரப்புரை செய்கின்றன.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளோம். காவல் துறை தகுந்த பாதுகாப்பு அளித்திருந்தால் கல் வீச்சு சம்பவம் நடந்திருக்காது. சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒரு விழுக்காடுகூட பாஜக வஞ்சகம் செய்யவில்லை. சிலர் பாஜக மீது பழிபோடும் நோக்கத்தில் பாஜக கொடி, டீசர்ட்டுகளுடன் பிரச்சினைகளை உருவாக்குவதாகத் தகவல் வந்துள்ளது.
எந்த மத உணர்வுகளுக்கும் பாஜக எதிரான கட்சியல்ல. உதயநிதி ஸ்டாலின் மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி குறித்து பேசியது அவரது அரசியல் அறியாமையைக் காட்டுகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜக குறித்துப் பேச எந்த அருகதையும் கிடையாது.
வாக்கு வங்கிக்காக பிரிவினையைத் தூண்டும் அரசியலை திமுக செய்து வருகிறது" என்றார்.
நேற்று(ஏப்ரல் 1) செய்தியாளர்களிடம் பேசுகையில், உ.பி முதலமைச்சர் வருகையின்போது நடந்த கல்வீச்சு சம்பவம் சிறிய சம்பவம் என வானதி சீனிவாசன் பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'கல் வீசியது சிறிய சம்பவம்தான்’: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்