கோயம்புத்தூர்: சௌரிபாளையம் பகுதியில் ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டு மூன்று தினங்களாக காமெடியாக கைதட்டல், விசில் என போகின்றது. சிங்க கூட்டம் சிறு நரி கூட்டம் என பல டயலாக் பேசினார்கள். கூட்டணி முடிந்துவிட்டது என்று கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜெயக்குமாரும் கூறிவிட்டார்.
ஜெயக்குமார் கொடுத்த ஸ்டேட்மென்டிற்கு எதிராக, கட்சிக்காரர்களை அமைதியாக இருக்கும்படி எடப்பாடி பழனிசாமியும் கூறிவிட்டார். ஜெயலலிதா என்ற ஆளுமையை விட எனது தாய், மனைவி உயர்த்தவர்கள், அண்ணா ஓடி ஓளிந்தார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகிறார். இரு சாதிகளை தூண்டிவிடும் வேலையை அவர் செய்கின்றார்" என பேசினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அமைதியாக இருக்க சொல்லி எந்த அறிக்கையும் வரவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் போனதுதான் பதில். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை எடப்பாடி பழனிசாமி உறுதிபடுத்த வேண்டும். இதில் ஏன் அமைதியாக இருக்கின்றார்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய புகழேந்தி, எடப்பாடி பழனிசாமி அப்படி உறுதிபடுத்தினால் சிறைக்குச் செல்வார் என்று கூறியதோடு, கோடநாடு கொலை வழக்கில் ஏன் எடப்பாடி பழனிசாமி மீது இதுவரை தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வியும் எழுப்பினார்.
மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நல்ல பீல்டு ஓர்க்கர் என்றும், எடப்பாடி பழனிசாமியை விட வேலுமணி புத்திசாலி என்றும் கூறினார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி மீது இருக்கும் ஏராளமான வழக்குகள் மீது மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.