கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாரியம்மன் கோயில். பழமைவாய்ந்த, மிகவும் பிரசித்தப் பெற்ற இந்தக் கோயிலானது, நகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா கடந்த பிப்.12-ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கப்பட்டது.
இதில் முக்கிய நிகழ்வான அம்மன் வெள்ளித் தேரில் திருவீதியில் வலம் வரும் நிகழ்ச்சி நேற்று (மார்ச் 6) இரவு நடைபெற்றது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரம் கொண்ட வெள்ளித் தேரில், நீலநிற பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
வெள்ளித் தேரில் வந்த மாரியம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரசினம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, விநாயகர் தேர் முன்னே செல்ல நாதஸ்வர மேளதாளம் முழங்க மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
நேற்று (மார்ச்.6) மற்றும் இன்று (மார்ச்.7),ஆகிய இருநாட்களில், 2 நிலைகளில் நிறுத்தி வைக்கப்படும் தேர், நாளை கோயிலை வந்தடையும்.