பொள்ளாச்சியில் சேர்ந்த கும்பல் ஒன்று பல இளம்பெண்களை மிரட்டி ஆபாசமாக படமெடுத்தும், பாலியல் தொந்தரவு கொடுத்தும் வந்தது சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் புள்ளிகளின் வாரிசுகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி, சிபிஐயிடம் ஒப்படைத்தது. இதனையடுத்து சிபிஐ தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த சூழலில், பொள்ளாச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் பார் நாகராஜன் ஒரு பெண்ணை மிரட்டும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில், “உயிர் மேல ஆசை இருந்தால் சம்பத் மேல் கொடுத்த கேஸை வாபஸ் வாங்கிட்டு ஓடிரு. இல்லைனா உன் கணவன் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்தாலும் சரி, சென்னை வந்தாலும் சரி அவனை தூக்குவேன். அப்புறம் உன் குடும்பத்தையும் தூக்குவேன்”என பேசியிருக்கிறார்.
அதற்கு, ”அந்த பெண் கேஸை வாபஸ் வாங்க மாட்டோம். உங்களால முடிஞ்சத பார்த்துக்கங்க எங்களால முடிஞ்சத நாங்களும் பார்த்துக்குறோம்” என பேசுகிறார். இந்த ஆடியோ விவகாரம் தற்போது புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.