கோவை சித்தாபுதூர் டெக்ஸ்டூல் அருகே கடந்த 5ஆம் தேதி இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தில் தாயும் மகனும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை செய்த போக்குவரத்து காவல் துறையினர், ராஜ்குமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். கார் காவல் துறையைச் சேர்ந்த ஒருவருடையது என்றும், ஆனால் காவல் துறையைச் சேர்ந்தவர் காரை ஓட்டி வரவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகள் வெளியாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடர்ந்து அக்கட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில், வழக்கில் திருப்பமாக ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர் நாகராஜ் என்பவர் காரை ஓட்டிவந்ததும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தனது நண்பர் ராஜ்குமார் வாகனத்தை ஓட்டிச் சென்றதாக நாடகமாடியதும் தெரியவந்துள்ளது.
நாகராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயுதப்படை துணை ஆணையருக்கு போக்குவரத்து துறை ஆணையர் முத்துரசு பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து காவலர் நாகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கை உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளாத ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் அன்னம்மாள் ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கார் மோதி தூக்கி வீசப்பட்ட தாய், மகன் - சிசிடிவி காட்சி வெளியீடு!