கோயம்புத்தூர்: விசாரணை வளையத்தில் இருந்த ரவுடி சஞ்சய் ராஜா போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பியோட முயற்சித்த நிலையில் போலீசார் சுட்டுப் பிடித்தனர். பாப்பநாயக்கன் பாளையத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சத்திய பாண்டி என்ற நபரை கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரு ரவுடி குழுக்களுக்கு இடையே இருந்த முன் பகை காரணமாக இந்த கொலை சம்பவம் நடைபெற்றது தெரிய வந்தது. இது தொடர்பாக கூலிப் படையினர் நான்கு பேர் அரக்கோணம் மற்றும் சென்னை நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
இவர்களில் சஞ்சய் ராஜா என்ற கூலிப்படை தலைவனை காவலில் எடுத்து கோவை தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, சீன நாட்டு தயாரிப்பு என்பதும், இரு துப்பாக்கிகள் சஞ்சய் ராஜாவிடம் இருந்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து சென்னையில் பதுக்கி வைத்திருந்தத துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்றொரு துப்பாக்கியை கோவை சரவணம்பட்டி அருகே கரட்டுமேடு பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக சஞ்சய் ராஜா விசாரணையின் போது தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
இதனையடுத்து இன்று காலை சஞ்சய் ராஜாவை தனிப்படை போலீசார் கரட்டுமேடு பகுதிக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்த சஞ்சய் ராஜா போலீசாரை நோக்கி இரண்டு ரவுண்டு சுட்டுள்ளார்.
நல்வாய்ப்பாக இந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து போலீசாருக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் தப்பினர். இதனை அடுத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தற்காப்பிற்காக சஞ்சய் ராஜாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் சஞ்சய் ராஜாவின் இடது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
நிலை தடுமாறி கீழே விழுந்த சஞ்சய் ராஜாவை காவல்துறையினர் பிடித்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், சிகிச்சைக்காக அவரை கோவை அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலை சம்பவத்தில் பயன்படுத்தபட்ட சீன நாட்டு துப்பாக்கிகள் இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சீன மாடல் துப்பாக்கியை கூலிப்படை கும்பல் எப்படி வாங்கியது?, கள்ள சந்தையில் சீன நாட்டு ஆயுதங்கள் விற்கப்படுகிறதா?, இந்த வகை சீன துப்பாக்கிகளை யார் யார் எல்லாம் வாங்கினார்கள்? என பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்பா, அம்மா எந்திரிங்க..! இறந்து கிடக்கும் யானைகளை எழுப்ப குட்டி யானைகள் பாசப் போராட்டம்!