கோயம்புத்தூர்: பேரூர் மதுக்கரை அருகே போடிபாளையத்தில் இளைஞரை சுத்தியால் தாக்கி கொலை செய்தவரை மதுக்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அரியலூர் மாவட்டம், நாகமண்டலத்தைச் சேர்ந்தவர் ராஜமுருகன். கோவை சீரநாயக்கன்பாளையத்தில் கட்டிட வேலை செய்து வரும் இவர், பேரூர் மதுக்கரை அருகே போடிபாளையம் மலுமிச்சம்பட்டி சாலையில் மர்ம நபரால் கொலை செய்து கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுக்கரை போலீசார், இறந்தவரின் உடலை மீட்டு, கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், ராஜமுருகனுடன் தங்கி இருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவர் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜசிங்கத்தை போலீசார் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ராஜமுருகன் மற்றும் ராஜசிங்கம் இருவரும் தூரத்து உறவினர்கள். கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோவை சீரநாயக்கன்பாளையம் பகுதியில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், ராஜமுருகனின் மனைவிக்கும் ராஜசிங்கத்திற்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் உறவு குறித்து ராஜமுருகனுக்கு தெரியவந்ததால் அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கணவர் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, ராஜமுருகனின் மனைவி ராஜ சிங்கத்திடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் ராஜமுருகனை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராஜ முருகனை மது அருந்துவதாக கூறி ராஜசிங்கம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ராஜசிங்கம் மது அருந்தாமல், ராஜமுகனுக்கு அளவுக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்துள்ளார். பின்னர், அவரை ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று, தலையில் சுத்தியால் தாக்கியுள்ளார். இதில், மயங்கி கீழே விழுந்த ராஜமுருகனை மீண்டும் சுத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், ராஜ முருகனின் மனைவியிடம், ராஜ சிங்கம் அடிக்கடி செல்போனில் பேசியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, கைது செய்துள்ள ராஜசிங்கத்தை, மதுக்கரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய துர்கா ஸ்டாலின்!