கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்றார்.
அப்போது தொழில் மையம், மாற்று திறனாளிகள் அலுவலகம், சமூக நல அலுவலகம், வேளான்துறை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 35,57,000 காசோலைகளை 21 பயனாளிகளுக்கு அவர் அமைச்சர் வழங்கினார்.
கரோனா கட்டுப்பாடுகள்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக கரோனா கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் முதலமைச்சர் மிக சிறந்த பணியை செய்து வருகிறார். மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பல லட்சம் பேர் பலன் அடைவார்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
வனத்துறையில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வழங்குவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. வனத்துறைக்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒன்றிய அரசின் நிதியை பெறாமல் விட்டு விட்டனர். தற்போது திமுக தலைமையிலான அரசு ஒன்றிய அரசிடம் பசுமை திட்டம் மூலம் இரண்டாயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.” என தெரிவித்தார்.