கோயம்புத்தூர்: வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சியில் 40 வருடங்களாக பொதுமக்கள் குமரன் கட்டம் முதல் அங்கலக்குறிச்சி வரை பேருந்து செல்லும் சாலையில், சிலர் சாலையில் இடங்களை ஆக்கிரமித்து அரசு அனுமதியின்றி இருபுறமும் கட்டடம் கட்டி பயன்படுத்தி வந்தனர். இதனால், வால்பாறை செல்லும் இப்பாதையை பள்ளி மாணவ மாணவிகள், வேலைக்குச் செல்லும் கூலித் தொழிலாளர்கள் பயன்படுத்தமுடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி தனியார் அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் உடனடியாக அதிகாரிகளும் இடத்தை ஆய்வு செய்தபோது, பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தனி அமர்வு நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
இதனை அடுத்து சாலைகளில் உள்ள தனியார் பயன்படுத்தி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர், பொதுவழக்குத் தொடர்ந்த மோகன் குமார் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “இந்த சாலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பேருந்துகள் செயல்பட்டு வந்தன. இப்பொழுது சாலையின் இரண்டு பகுதிகளிலும் பொதுமக்கள் சாலையை ஆக்கிரமித்து அரசு அனுமதி இன்றி கட்டடம் கட்டி பயன்படுத்துவதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் மற்றும் உடுமலை, வால்பாறை செல்லும் பயணிகளுக்கு மீண்டும் அதே வழித்தடத்தில் பேருந்து சென்றால் 3 கி.மீ, தூரம் சுற்றி செல்ல வேண்டாம். இதனால் உடனடியாக பொதுப் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். கோட்டூர் பேரூராட்சியில் தனித் தீர்மானம் போட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சாலையை விரிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Parliament Adjourned : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!