கோயம்புத்தூர்: ஞாயிற்றுக்கிழமை (அக் 23) கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் முன்பு, சிலிண்டர் வெடித்ததில் கார் வெடித்து சிதறியது. இதில் ஜமேஷா முபின் என்ற இளைஞர் உயிரிழந்தார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், உக்கடம் மற்றும் ஜி.எம்.நகரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்கள் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுதொடர்பாக உபா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்துவதற்கு முகாந்திரம் உள்ள வழக்காக கருதப்பட்டுள்ளது.
இதன்படி வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக முதற்கட்ட கள ஆய்வு மேற்கொள்வதற்காக, நேற்று (அக் 25) இரவு விமானம் மூலம் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கோவை சென்றுள்ளனர். இதனையடுத்து இன்று (அக் 26) காலை முதல் என்ஐஏ அலுவலர்கள் தங்களது சோதனையைத் தொடங்கி உள்ளனர்.
ஆனால், பொதுவாக தமிழ்நாடு காவல்துறையிடம் உள்ள இந்த வழக்கு, முறையான ஆவணங்கள் மற்றும் தடயவியல் அறிக்கை உள்ளிட்ட மொத்த கோப்புகளுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு இருந்துதான் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கும்.
இருப்பினும் அதற்கு முன்னதாகவே கள ஆய்வு மேற்கொள்ள என்ஐஏக்கு அதிகாரம் உள்ளது என்கிற அடிப்படையில், விபத்து தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு: 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்